articles

img

நிதி எதேச்சதிகாரத்திற்கு எதிரான தென் இந்தியாவின் போர்! - ஜி.ராமகிருஷ்ணன்

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத் தில் ஒன்றிய பாஜக அரசு அத்து மீறி தலையிடுவதை எதிர்த்தும், மாநிலங்களின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி மீது ஒன்றிய அரசின் பாகுபாடு மற்றும் வன்மம் மிகுந்த தாக்குதலைக் கண்டித்தும், இன்றைய தினம் (பிப்.8) புதுதில்லியில் கேரள அரசு நேரடியாக மாபெரும் போராட் டத்தை நடத்துகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலை மையில் கேரளத்தின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங் கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இன்று போராட்டம்

ஒன்றிய அரசின் பாரபட்சத்திற்கு எதிராக ஒரு மாநில அரசே தலைநகர் தில்லியில் வீதியில் இறங்கிப் போராடுகிற அவலச்சூழலை மோடி தலைமையி லான பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தும், மாநிலங்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இந்தப் போராட்டத்தில் ‘இந்தியா’ அணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் பங்கேற்கின்றன.

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்தப் போராட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. கேரள அரசு முன்னெடுக்கும் இந்த போராட்டம் தற்போ தைய இந்திய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்து வம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கேரள அரசின் போராட்ட நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முதல மைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதும், அதற்கு அவர் நன்றி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள அரசு போராட்டம் அறிவித்த பின்னணியில், ஒன்றிய அரசின் ‘நிதி எதேச்சதிகாரத்தை’ எதிர்த்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும், பிப்ரவரி 7 புதனன்று தில்லியில் போராட்டம் நடத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த போராட்டம் நடந்துள்ளது. 

ஏன் இந்த போராட்டங்கள்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்கள் நான்கு. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, பொருளாதார இறையாண்மை ஆகிய வையே அவை. இந்த நான்கு தூண்களையும், அடி யோடு தகர்க்கக்கூடிய வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. 

இதில் கூட்டாட்சியைப் பற்றி பேசும் போது, மாநில சுயாட்சி என்பது முக்கியம் இடம் பெறுகிறது. ஆனால் இதை மறுதலிக்கும் மோடி அரசு, மாநிலங்களை, குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநி லங்களை குறிவைத்து, அந்த அரசுகளை கவிழ்க் கும் நோக்கத்துடன், அம்மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வஞ்சனை செய்து அதன் மூலம் அந்த அரசாங்கங்களை சீர்குலைப்பது என்பதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. கூட்டாட்சி என்று சொன்னால் அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, நிதி  பகிர்வு என்பதும் மிக முக்கியமானதாகும். ‘நிதி கூட்டாட்சி’ (Fiscal Federation) என்று இது அழைக்கப் படுகிறது. நிதிப் பகிர்வில் நேர்மையும், நீதியும் இல்லா மல் கூட்டாட்சி என்பது பொருள்படாது. அத்தகைய நிதி கூட்டாட்சியை முற்றாகத் தகர்த்து, மாநிலங்க ளை - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை யும் அதன் மக்களையும் பழி வாங்கும் செயலில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 

பல்லாயிரம் கோடி நிதி நிலுவை
மாநிலத்திற்கு அதிகாரமும், நிதி ஒதுக்கீடும் கேட்பது என்பது அங்கு ஆளும் அரசுக்கு அதிகார மும் நிதியும் கேட்பது என்பதல்ல; மாறாக, அம்மாநில மக்களின் வாழ்வாதாரமான பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் தீர்ப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்காகவே ஆகும். மாநில மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வளர்ச்சி ஆகிய வற்றுக்காகத்தான் நிதி கோரிக்கைகள். 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிற கேரளத்தின் மீது ஒன்றிய மோடி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அப்பட்டமான பாரபட்சத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறது. ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் கேரளாவுக்கு கடந்தாண்டு மட்டும் ரூ.57 ஆயிரம் கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது மோடி அரசு. கர்நாடக அரசுக்கு ரூ.62 ஆயிரம் கோடியை நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு தோறும் வரவேண்டிய நிதியில் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு.   

செஸ், சர்சார்ஜ்  உயர்த்தப்பட்ட கதை

அதேபோல ஜிஎஸ்டி மூலம் கிடைக்கப் பெறுகிற வருமானத்தில் மாநிலங்களுக்கான பங்குத் தொகை யை உரிய முறையில் கொடுக்காமல் ஏமாற்றி வஞ்சித்து வருகிறது மோடி அரசு. இதற்கு மேலாக கடந்த 14 ஆவது நிதி ஆணைக்குழு பரிந்துரைத்த விதிகளை யும் அமலாக்க மோடி அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு கிடைக்கப் பெறும் ஒட்டு மொத்த வரி வருவாயில் 42 சதவீதம் மாநில அரசுகளுக்கு பங்குத் தொகையாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று நிதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. நிதி ஆணைக்குழு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள அமைப்பு ஆகும். ஆனால் பிரதமர் மோடி, 42 சதவீதம் ஒதுக்க  முடியாது; 32 சதவீதமாக ஆக்குங்கள் என்று கூறு கிறார். எனினும் நிதி ஆணையக்குழு அதை ஏற்க வில்லை. இந்த பின்னணியில் மோடி அரசு செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி விகிதங்களை கடுமையாக ஏற்றி அறிவிக்கிறது. இந்த செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் ஒரு பைசா கூட மாநிலத்திற்கு பகிர்ந்தளிக்கப்படாது. 

செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகள் மூலமாக ஒன்றிய அரசுக்கு 2017- 18 நிதியாண்டில் கிடைக்கப்பெற்ற வருமானம் ரூ.2,66,000 கோடியாக இருந்தது, இந்த வரிகளை சூழ்ச்சிகரமாக ஏற்றியதன் காரணமாக தற்போது ரூ.4,99,000 கோடியாக மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்துள்ளது. 

இது மோடி அரசின் மிகப் பெரும் வன்மமும், வஞ்சக மும் ஆகும். மாநில அரசுகளுக்கு பத்து சதவீதம் நிதி பகிர்மானத்தை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை நிதி ஆணையம் ஏற்காததால், மாநிலங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் மேற் கண்ட வரிகளை கடுமையாக அதிகரித்து ஒட்டச் சுரண்டி வருகிறது மோடி அரசு.

தென் மாநிலங்கள் கடும் பாதிப்பு

தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநி லங்களுக்கு ஒன்றிய அரசு மொத்தம் ஒதுக்கும் நிதி  ரூ.1,90,000 கோடி ஆகும். இந்த ஐந்து மாநிலங்களி லும் சேர்த்து மொத்தம் 29 கோடி மக்கள் இருக்கி றார்கள். ஆனால் இதைவிட குறைவாக 25 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநி லத்திற்கு, விகிதாச்சார அடிப்படையில் குறைவாக நிதி ஒதுக்க வேண்டும்; ஆனால் மிகக்கூடுதலாக 3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது மோடி அரசு.

அதேபோல ஒன்றிய, மாநிலஅரசுகள் நிதி கடன் பொறுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளவை. இந்த சட்டத்தின்படி கடன் பெறுவ தற்கான வரம்பை மாநிலங்களுக்கு 3 சதவீதம் மட்டுமே என்று ஒன்றிய அரசு குறைத்து நிர்ணயித்துள் ளது. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக வெளிப்படுகின்றன. 

இந்த நிலைமையிலும் கூட, கேரள அரசு தனது நிதியாதாரங்களைத் திறம்படக் கையாண்டு, வரு வாய்ப் பற்றாக்குறையையும் நிதிப் பற்றாக்குறை யையும் கணிசமாக குறைத்துள்ளது. 2023- 24இல் கேரளாவின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 2.44 சதவீதமாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 0.88 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மாறாக, ஒன்றிய பாஜக அரசின் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறப்பு அதிகாரம் துஷ்பிரயோகம்
ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, ஒன்றிய அரசின் திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது. மற்றொன்று ஒன்றிய அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்வது. சிறப்பு அதிகாரம் என்பதை பயன் படுத்தி பாஜக ஆளும் மாநிலங்களுக்குத்தான் மோடி  அரசு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையாக இருந்தாலும் சரி, வேறு பல திட்டங்களாக இருந்தா லும் சரி உரிய நிதி ஒதுக்குவதில்லை. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆண்டுதோறும் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்; அது தவிர வெள்ளம் உட்பட இயற்கை பேரிடர்கள் பெரிய அளவிற்கு நேர்ந்தால் கணக்கெடுத்து அதற்கேற்றாற் போல் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அப்படித்தான் தமிழ்நாடு அரசு சமீபத்திய வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பிற்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கு மாறு கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு வழக்கமான பேரிடர் நிவாரண நிதியை அளித்து விட்டு, கைவிரித்து விட்டது. 

எனவே ‘நிதி கூட்டாட்சி’ என்பதன் மீது மிகப் பெரிய தாக்குதலை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பாஜக அல்லாத மாநிலங்கள் மீதான இத்தகைய தாக்குதல் மூலமாக, அந்த மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படச் செய்து அவற்றை கவிழ்ப்பது என்பதுதான் இதன் பின்னால் உள்ள சூட்சுமம் ஆகும். 

இத்தகைய நிலையில்தான் கேரளா அரசு, ஒன்றிய பாஜக அரசின் வஞ்சனைகளை முறியடிக்கும் திட்டங்க ளை செயல்படுத்தி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து நிற்கிறது. மாநில அரசே ஒரு முதலீட்டு வங்கியை ‘கிப்பி’ என்ற பெயரில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. 

வேட்டையாடப்படும் எதிர்க்கட்சிகள்
நிதி கூட்டாட்சியுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் இதர அனைத்து அடிப்படைகளையும் தகர்த்து வருகிற ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை யும், அதன் தலைவர்களையும் வேட்டையாடி வரு கிறது. ஜார்க்கண்டில் ஹேமந்த்சோரன் தலைமையி லான அரசை கவிழ்க்க முயற்சித்து அம்பலப்பட்டு நிற்கிறது. தில்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசையும் கவிழ்க்க முயற்சித்து வருகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஆட்சியாளர்களின் கண் அசைவு க்கு ஏற்ப காரியங்கள் நடந்து, அங்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லாத பாஜக, மேயர் பதவியை கைப்பற்ற முடிந்திருக்கிறது. அப்படித்தான் ஏற்கெனவே தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெறவே முடியாத நிலை எழுந்த போது அந்த தேர்த லையே ரத்துசெய்ய வைத்தார்கள். 

மாநிலங்கள் மீதான நிதி ரீதியான, அரசியல்ரீதி யான தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் கம்பெனிகள் மீதான வரிவிதிப்பு 33சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக மோடி ஆட்சியில் குறைக்கப்பட்டு மிகப் பெரும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சத வீதம் வரிச் சலுகை அளித்தால் கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கு ரூ. 50ஆயிரம் கோடி லாபம். பத்து சதவீதம் வரிச்சலுகை அளித்ததன் மூலம் ரூ.5.5 லட்சம் கோடியை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு. 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீதான இத்த கைய தாக்குதல்கள் மூலமாக மக்களின் நலனை சீர்குலைத்து, அவர்களது வருவாயை ஒட்டச் சுரண்டி, பெரும் கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் மோடி  அரசின் நிதி எதேச்சதிகாரத்திற்கு எதிராகத்தான் கேரளாவும், தமிழ்நாடும், கர்நாடகாவும் முழங்கு கின்றன. இந்த முழக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். 

;